மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் எட்டோமிடேட் மின்சிகரெட் பயனர்கள் கண்காணிப்பில் வைக்கப்படவோ போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவோ தேவைப்படும் நடைமுறைக் காலம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்ச் சுகாதார அதிகாரிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ள கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2026 செப்டம்பர் முப்பதாம் தேதி வரை பிடிபட்ட 1,544 எட்டோமிடேட் மின்சிகரெட் குற்றவாளிகளில் 367 பேர் மீண்டும் குற்றம் புரிந்துள்ளனர்.
இது வியாழக்கிழமையன்று, சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் சிலர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பிடிபட்டுள்ளனர். இதே காலகட்டத்தில், 16 வயதும் அதற்கு மேற்பட்டோருமான 67 பேர் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த 2025 செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அமலாக்கமும் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டபோதிலும் எட்டோமிடேட் மின்சிகரெட் குற்றங்கள் தொடர்ந்து கவலையளிப்பதால் தற்போது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மறுவாழ்வில் உள்ளவர்களுக்கு எட்டோமிடேட் அல்லது பிற மனவியல் ரீதியாகப் பாதிக்கும் பொருள்களின் பயன்பாட்டைக் கண்டறியக் கூடுதல் திடீர் சிறுநீர், முடிப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
மறுவாழ்வின்போது ஒத்துழைக்காத அல்லது மீண்டும் குற்றம் புரியும் 16 வயதும் அதற்கு மேற்பட்டோரும் கடுமையான கண்காணிப்புக்கோ மறுவாழ்வு நிலையத்திற்கோ அனுப்பப்படுவர். இரண்டாம் முறை மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படுவோர் முந்தைய கால அளவைவிட இருமடங்கு காலம் அங்குத் தங்க வேண்டும்.
