மதுபோதையில் விபத்து: சிங்கப்பூருக்குத் தங்கம் வென்று தந்த வீரருக்குச் சிறை

1 mins read
5b4ce4b9-62dd-4253-82f4-3c9f43107043
மூன்று முறை சிங்கப்பூருக்குத் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்று தந்தவர் விவியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்குச் சுவர்ப் பந்தில் தங்கம் வென்ற விவியன் ரமணன் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 30 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இரவு செம்பவாங் ஹில்ஸ் டிரைவ்வில் விவியன் காரை ஓட்டத் தடுமாறியதாகவும் அதனால் விபத்தை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கவனம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிய விவியன் எதிர்த்திசையில் உள்ள சாலைத் தடத்திற்குள் புகுந்து மற்றோர் கார்மீதும் மோதினார்.

எதிர்த்திசையில் வந்த காரில் இரண்டு பயணிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. காரும் கடுமையாகச் சேதமடைந்தது.

சம்பவத்தின் போது விவியனின் ரத்தப் பரிசோதனையில் 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 82 மில்லிகிராம் மது இருந்தது. 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 80 மில்லிகிராமுக்கு மேல் மது இருக்கக்கூடாது.

39 வயது விவியன் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மூன்று முறை சிங்கப்பூருக்குத் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்று தந்தவர் விவியன் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்