காவல்துறை தலைமையகத்தின் வெளியே வாகனத்தில் தூங்கிய ஓட்டுநர் கைது

2 mins read
b65b658c-28ef-409a-9d43-d066c8dd2a59
போக்குவரத்துக் காவல்துறைத் தலைமையகத்தின் அருகே ஆடவர் வாகனத்திலேயே தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. - படம்: ஏ‌ஷியா ஒன்

போக்குவரத்துக் காவல்துறைத் தலைமையகம் அமைந்துள்ள பாய லேபார் ரோட்டுக்கு அருகே மது அருந்திவிட்டு வாகனத்திலேயே தூங்கிவிட்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் சனிக்கிழமை (டிசம் பர் 21) நள்ளிரவுக்குப்பின் 12.30 மணிக்கு நடந்துள்ளது. அந்த வேன் தலைமையகம் அமைந்துள்ள உபி அவென்யூ 3க்கு 450மீட்டர் தொலைவில் பாய லேபார் ரோட்டில் நின்றிருந்தது.

பாய லேபார் ரோடு வழியே சென்ற பொதுமக்களில் ஒருவர் வாகனம் உபி அவென்யூ 2ன் இரண்டாம் தடத்தில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்து, சந்தேகப்பட்டுக் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பாய லேபார் ரோட்டில் உதவிகேட்டு அழைப்பு வந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு ஆடவர் கைது செய்யப்பட்டார் எனவும் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறை குறிப்பிட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

பொதுமக்களுக்குத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துமாறு வாகனங்களை விட்டுச் செல்வோருக்கு மூன்று மாதச் சிறை, $2,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவோருக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதம், 12 மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

போக்குவரத்துக் காவல்துறை வழங்கிய தரவுகளின்படி, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டிய குற்றங்களுக்குக் கைதானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல்பாதியில் 818ஆக இருந்து இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 862ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்