உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரியைப் படம், காணொளி எடுத்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரியைப் படம், காணொளி எடுத்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
3bd956fe-d1eb-43cd-9b23-824a17b89441
பாதுகாக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் அனுமதி இல்லாது படமெடுத்ததாக சிங்கப்பூரரான 37 வயது வோங் ஜியோ வா மீது ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று உள்கட்டமைப்புப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரியைப் படமெடுத்ததாக நம்பப்படும் வாகன ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் அனுமதி இல்லாது படமெடுத்ததாக சிங்கப்பூரரான 37 வயது வோங் ஜியோ வா மீது ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் மீது தொல்லை விளைவித்தலிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்கீழ் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று பிற்பகல் 12.30 மணி அளவில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் உள்ள புறப்பாட்டு வளாகத்தில் வோங் இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் படங்களும் காணொளிகளும் மறுநாள் ‘கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அவற்றை யார் பதிவேற்றம் செய்தது என்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயரும் அவர் எந்த முனையத்தில் பணியாற்றுகிறார் என்ற விவரமும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த அதிகாரி தொடர்பாக எதிர்மறையான கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன.

ஓட்டுநரிடம் அந்த அதிகாரி மரியாதையில்லாமல் நடந்துகொண்டதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமூக ஊடகப் பதிவுகள் பற்றி தனக்குத் தெரியும் என்று ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

பயணி மேல் வெயில் படாமல் இருக்க அந்த ஓட்டுநரின் காரின் வலது பக்க சன்னலில் திரை பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதை அகற்றும்படி அதிகாரி கேட்டுக்கொண்டபோது அந்த ஓட்டுநர் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

சம்பவத்துக்குப் பிறகு அந்த அதிகாரியை அந்த ஆடவர் படம், காணொளி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அதிகாரி தமது மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அந்த ஓட்டுநர் மேல் அதிகாரிகளின் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதிகாரியைப் படமெடுத்ததை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தப் படங்களும் காணொளிகளும் தமது சாதனத்திலிருந்து நீக்கப்படும் என்று அந்த ஆடவர் உறுதி அளித்திருந்தார்.

ஆனால், அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

வோங் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வோங்கிற்கு $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்