அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவித்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிவப்பு போக்குவரத்து விளக்கு எரிந்தபோதும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரியான 56 வயது பட்ரோலிஸாம் கம்சின், வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 22ஆம் தேதி பிற்பகல் 12.40 மணி அளவில் ஜாலான் பூன் லேவுக்கும் பூன் லே அவென்யூவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்தது.
பட்ரோலிஸாமின் செயலால் இன்னொரு காரின் ஓட்டுநர், அதில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.
பட்ரோலிஸாம் தொடர்பான இந்த வழக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவிக்கும் குற்றத்தை முதல்முறையாகப் புரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இக்குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

