சிங்கப்பூரில் மதுபானம் அருந்திவிட்டு காரை ஓட்டிய குற்றத்தை மறைக்க முற்பட்ட ஆடவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேமுவல் கோமெஸ்-லிம் ஜியே’என் என்ற 36 வயது ஆடவர், மது அருந்தியிருந்ததை மறைக்க கூடுதல் மது அருந்தினார். நீதிக்குத் தடையாக இருந்த குற்றத்தைக் கோமஸ் லிம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து மூவாண்டு வாகனம் ஓட்டுவதற்கான தடையும் கோமெஸ் லிம்முக்கு விதிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கோமெஸ் லிம்மும் அவரது நண்பர் 28 வயது கிளேர் செங் வெய் யிங்கும் செந்தோசா கடற்கரையில் மதிய உணவு உட்கொண்டபின் மதுபானம் கலந்த சோடாவை அருந்தினர்.
பின்னர் மாலை 5 மணியளவில் இருவரும் டெய்ரி ஃபார்ம் வட்டாரத்தில் உள்ள கோமெஸ் லிம்மின் கூட்டுரிமை வீட்டிற்குக் காரில் சென்றனர். காரை ஓட்டிய கோமெஸ் லிமின் கூட்டுரிமை வீட்டின் தூணில் மோதினார்.
அதையடுத்து அருகில் இருந்தவர்கள் காரில் இருந்தோரைப் பிடித்து அருகில் அமரவைத்தனர். காவல்துறை வருவதற்குள் கோமெஸ் லிம், செங்கிடம் வீட்டிற்குச் சென்று மதுபானம் ஒன்றை எடுத்துவரும்படி கூறினார்.
காவல்துறையிடம் விபத்து நடந்தபிறகுதான் மது அருந்தியதாக கோமெஸ் லிம் தெரிவித்தார்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் கோமெஸ் லிம்மின் சுவாசத்தில் 100 மில்லிலிட்டருக்கு 73 மைக்ரோகிராம் அளவு மதுபானம் இருந்தது கண்டறியப்பட்டது. அது அனுமதிக்கப்பட்ட 35 மைக்ரோகிராமைவிட இரு மடங்கு அதிகம்.


