பாதுகாப்பு அதிகாரியைத் தள்ளிய ஓட்டுநருக்கு ஆறு வாரச் சிறை

பாதுகாப்பு அதிகாரியைத் தள்ளிய ஓட்டுநருக்கு ஆறு வாரச் சிறை

2 mins read
0a82e124-84a2-4422-b43d-eff99ba94fe7
ஒருவரைத் தாக்கியதற்கான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிறகு சீனக் குடிமகன் வாங் லின்னுக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தொழிற்சங்கம்

யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு வெளியே பிஎம்டபிள்யூ எக்ஸ்5 வாகனத்தை ஓட்டிவந்த ஆடவர் ஒருவர் அதிலிருந்து வெளியேறி, தம்மிடம் உரக்கப் பேசிய மூத்த பாதுகாப்பு அதிகாரியைத் தள்ளியுள்ளார்.

கீழே விழுந்த பாதுகாப்பு அதிகாரியான 56 வயது பிரகாஷ் கோவிந்தன் தாமோதரனின் இடது மணிக்கட்டு எலும்பு முறிந்தது.

வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக அஸேண்டோ கேப்பிட்டல் ஹோல்டிங்ஸ், ஒய்பி இன்வெஸ்ட்மண்ட்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராகப் பணிபுரியும் சீன நாட்டவரான 42 வயது வாங் லின்னுக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி காலை 11.45 மணி அளவில் தமது மனைவியையும் மகளையும் ஏற்றிக்கொள்ள சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு வாங் யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதிக்குச் சென்றிருந்தார்.

அப்போது மழை பெய்ததால், தமது குடும்பத்தார் நனையாமல் இருப்பதற்காக வாங் கட்டடத்திற்கு மிக அருகில் உள்ள தடத்திற்கு வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்தும்படி திரு பிரகாஷ் சைகை காட்டினார்.

டாக்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட அந்தத் தடத்தில் செல்லக்கூடாது என்றும், கார் நிறுத்துவதற்கு 30 நிமிடங்கள் இலவச கால அவகாசம் இருப்பதாகவும் கூறிய திரு பிரகாஷ், கடைத்தொகுதியின் கார் நிறுத்துமிடத்தைப் பயன்படுத்துமாறு வாங்கைக் கேட்டுக்கொண்டார்.

திரு பிரகாஷ் தம்மைப் பார்த்து உரக்கப் பேசியதும் வாங் அதிர்ச்சியடைந்ததாக அவரது வழக்கறிஞர் திரு டில்லன் கூறினார். அதோடு, திரு பிரகாஷ் வாங்கின் வாகனத்தின் முன்பகுதியைத் தட்டியதாகவும் அவர் சொன்னார்.

அதிருப்தியடைந்த வாங் வாகனத்தைவிட்டு வெளியேறி திரு பிரகாஷைத் தள்ளினார்.

பிறகு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தொழிற்சங்கம் பாதுகாப்பு அதிகாரிகள் வேலையிடத்தில் படும் துன்புறத்தல் சம்பவங்கள் குறித்து அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

வாங் இரண்டு நாள்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்