ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 13ல் சனிக்கிழமை (நவம்பர் 21) இரவு நடந்த விபத்தில் 32 வயது கார் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜூரோங் டவுன்ஹால் ரோட்டை நோக்கிச் செல்லும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 13 என்ற சாலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையே நடந்த விபத்து குறித்து அன்றைய தினம் இரவு 9.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
போதைப் பொருள் கலந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நீராவிக் கருவிகளும் (வேப்பரைசர்) ஒரு மின்சிகரெட்டும் (கேபாட்) கைதானவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறை கூறியது.
வேப்பரைசர் குற்றம் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தும் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றதற்கும் கைதானவர் விசாரிக்கப்படுகிறார்.
காயமுற்றதால் பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
விபத்து குறித்து ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டப் புகைப்படத்தில், அதன் முன்பாகம் பாதிப்படைந்த நிலையில் புல்வெளியில் நிறுத்தப்பட்ட வெள்ளிநிறத்திலான காரைக் காணமுடிந்தது.
சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாடு 2018ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது.
