‘கோடீன்’ உட்கொண்ட பிறகு போக்குவரத்து விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுநர்

‘கோடீன்’ உட்கொண்ட பிறகு போக்குவரத்து விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுநர்

2 mins read
cc9db9bd-ca50-4280-90fb-86778f3d4588
மே 11 அன்று, 40 வயது ஃபாஹ்மிக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையும், $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆடவர் ஒருவர் இருமல் மருந்து உள்ளிட்ட மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே காரை ஓட்டி, இறுதியில் சாலையோரம் உள்ள நடைபாதையின் விளிம்பின் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார்.

அந்த நேரத்தில் தனியார் வாடகைக் கார் ஓட்டுநராக இருந்த முகம்மது ஃபாஹ்மி ஜோஹாரியின் ரத்த மாதிரியில் கண்டறியப்பட்டவற்றில் வாகனம் ஓட்டுவது உட்பட ஒரு நபர் பல விஷயங்களைச் செய்யும் திறனைப் பாதிக்கக்கூடியவை ஆகும்.

அவற்றில் சில இருமல் மருந்துகளில் காணப்படும் பொருளான கோடீன், பதற்றக் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் டயஸெபம், சளி மற்றும் ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் பல மருந்துகளில் காணப்படும் ‘சூடோபெட்ரின்’ ஆகியவை அடங்கும்.

2023ஆம் ஆண்டில், அவர் மற்றொரு காரை ஓட்டிச் சென்றபோது வேறொரு விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அந்த இன்னொரு வாகன ஓட்டுநரின் சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மே 11 அன்று, 40 வயது ஃபாஹ்மிக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் பொருள்களை உட்கொண்டு வாகனம் ஓட்டியது, அத்துடன் கவனமின்றியும் எச்சரிக்கையின்றியும் வாகனம் ஓட்டி மற்றொரு நபருக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

மே 11 முதல் ஆறு ஆண்டு காலத்துக்கு அனைத்து வகையான ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருப்பதற்கோ அல்லது பெறுவதற்கோ அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

2022 ஜூன் 21ஆம் தேதியன்று ஃபாஹ்மி அதிகாலை 3.30 மணியளவில் ஈசூன் சென்ட்ரல் வழியே ஓட்டிச் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

கார் சாலைத் தடுப்பின்மீது மோதி, நடைபாதை விளிம்பில் ஏறி, தடுப்பின் வழியே சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ஃபாஹ்மியின் நடை தடுமாறுவதையும் அவரது பேச்சு குளறுவதையும் கவனித்தனர்.

அன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரியில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், 2023ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதியன்று இரவு 8.30 மணியளவில் சிலேத்தார் வெஸ்ட் லிங்க் வழியே வாடகைக் கார் ஒன்றை ஓட்டிச் சென்றபோது, ஃபாஹ்மி தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

வாகனம் மற்றொரு காரின் பின்புறத்தில் மோதியதில், அக்காரின் 54 வயது ஓட்டுநருக்குச் சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர் அந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி காலை 10 மணிக்குச் சற்று முன்னதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்றார். மேலும் கையில் வெளிப்புற நோயாளிப் பிரிவில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கான முன்பதிவுடன் அன்றே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

அவருக்கு 2023 ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டது.

ஃபாஹ்மி 2025ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்