வேக வரம்பை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி, வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதற்காக திங்கட்கிழமை (டிசம்பர் 22) அன்று ஒருவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
33 வயதான டான் வெய் ஃபெங், குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி ஒன்பது பேருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர்கள் அனைவரும் லாரியின் பின்புறத்தில் பயணித்த வெளிநாட்டு ஊழியர்கள்.
லாரியின் ஓட்டுநர், பயணி இருக்கையில் இருந்த இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள், டானின் காரில் இருந்த ஒரு பயணி என மூன்று பேருக்கு காயங்களை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்கான மற்றொரு குற்றச்சாட்டு தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
இந்த விபத்து ஜூலை 19, 2023 அன்று காலை சுமார் 7.45 மணியளவில் காலாங்-பய லேபார் விரைவுச்சாலையில் நடந்தது. அப்போது வானிலை நன்றாக இருந்தது. சாலையில் ஈரம் இல்லை.
டானின் கார் மூன்றாவது தடத்திலிருந்து முதல் தடத்தை நோக்கிச் செல்வதை லாரிக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளோட்டி கண்டார்.
பின்னர் டானின் கார் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று, முதல் மற்றும் இரண்டாவது தடத்துக்கு இடையில் அதிவேகமாகச் சென்று லாரியின் வலது பின்புறத்தில் மோதியது.
இதன் விளைவாக, முதல் தடத்தில் சென்றுகொண்டிருந்த லாரி, சுழன்று சாலையின் பக்கவாட்டுத் தடுப்புகளில் மோதி அதன் பக்கவாட்டில் கவிழ்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
லாரியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த பயணிகளில் சிலர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் டான் மணிக்கு 130 கிமீ முதல் 160 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்றதாக சுகாதார அறிவியல் ஆணையத்தின் வேக பகுப்பாய்வு மதிப்பிட்டுள்ளது.
அச்சாலையின் வேக வரம்பு மணிக்கு 80 கிமீ ஆகும். லாரி வேக வரம்பிற்குள் பயணம் செய்தது.
இந்த விபத்தில் 23 முதல் 41 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள் படுகாயமடைந்தனர். மேலும் நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
ஒன்பது ஊழியர்களுக்குத் தலையில் காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு மற்றும் முதுகெலும்பு, மண்டை ஓடு, முகம், கண், விலா எலும்பு முறிவுகள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டன.

