கிளமெண்டியில் மரத்தில் கார் மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

கிளமெண்டியில் மரத்தில் கார் மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

படம்: சாவ்பாவ்

11 May 2026 - 4:13 pm

1 mins read

கிளமெண்டியில் நிகழ்ந்த கார் விபத்தில் 56 வயது நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மே 10) உயிரிழந்தார். அவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றின்மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

வெஸ்ட் கோஸ்ட் சாலையை நோக்கிச் செல்லும் கிளமெண்டி அவென்யூ 2ல், மாலை 6.10 மணியளவில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றின் ஓட்டுநர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

அந்த ஆடவரைத் தான் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இணையத்தில் வலம்வரும் புகைப்படங்களில், கருப்பு நிற கார் ஒன்று சாலைத் தடுப்பில் இருந்த மரத்தின்மீது மோதி நசுங்கிக் கிடப்பதைக் காண முடிந்தது. காரின் பாகங்கள் சாலைத் தடுப்பின் இருபுறமும் சிதறிக் கிடந்தன.

விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகார்ஓட்டுநர்மரணம்