போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதாக நம்பப்படுபவர் ‘எஸ்சிடிஎஃப்’ தேசிய சேவையாளர்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதாக நம்பப்படுபவர் ‘எஸ்சிடிஎஃப்’ தேசிய சேவையாளர்

1 mins read
c30f20ec-c943-4ec3-9242-97ba82970832
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: JUSTPLAYPRODUCTION / டிக்டாக்
Google News Preferred Icon

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டியதாக நம்பப்படுபவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தேசிய சேவையாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இத்தகவலை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) உறுதிப்படுத்தினார். அச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நிகழ்ந்தது.

அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு தீவு விரைவுச்சாலையை நோக்கிய புக்கிட் தீமா விரைவுச்சாலைப் பகுதியில் காரை ஓட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5.35 மணியளவில் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

சம்பவம் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் சந்தேக நபருடன் ஆடவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. விரைவுச்சாலையின் இடது புறம் இருக்கும் சாலைத் தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களுக்கு அருகே அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டையும் காலணிகளும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைச் சீருடையின் அங்கங்களைப்போல் தெரிந்தன. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமானதாகத் தாங்கள் கருதுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார். முழுநேர தேசியச் சேவையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் எல்லா நேரங்களிலும் உயரிய நடத்தையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துஓட்டுநர்வாகனம்சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை