சர்க்கியுட் ரோட்டில் வியாழக்கிழமை காலை நடந்த வாகன விபத்தில் 59 வயது கார் ஓட்டுநர் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவற்ற நிலையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து புளோக் எண் 88 சர்க்கியுட் ரோட்டில் நடந்தது என்றும் இது குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை காலை 7.10 மணிக்குத் தகவல் கிடைத்தது என்றும் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை காலை 7.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் விபத்தில் காயமடைந்த அந்த ஓட்டுநரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
இந்த விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சாம்பல் நிறக் காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும், அந்த கார் சாலையைவிட்டு விலகி நடைபாதைக்கு வந்து நின்றிருப்பதையும் வீவக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குச் சொந்தமான பூந்தொட்டிகள் ஆங்காங்கே உடைந்து சிதறிக் கிடப்பதையும் அந்தப் புகைப்படங்களில் காண முடிந்தது.
அந்த காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும் அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்ததாகவும் அந்தப் பகுதியில் இருக்கும் ஆடை விற்பனைக் கடையின் உரிமையாளர் சீன நாளிதழான ஷின் மின்னிடம் கூறினார்.
இது குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

