சிங்கப்பூரில் படிப்படியாக உயர்த்தப்படும் ஓட்டுநர் உரிமத் தேர்வுக் கட்டணங்கள்

சிங்கப்பூரில் படிப்படியாக உயர்த்தப்படும் ஓட்டுநர் உரிமத் தேர்வுக் கட்டணங்கள்

2 mins read
7ace9717-5967-443e-a7e0-a5505b9e5c13
அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவினங்களால் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகப் போக்குவரத்துக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத் தேர்வுக் கட்டணங்கள் கட்டங்கட்டமாக உயர்த்தப்படவிருப்பதாகப் போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

கார் ஓட்டுவதற்கும் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்குமான அனைத்துப் பயிற்சிகளுக்கும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) முதல் கட்டணங்கள் உயர்கின்றன.

அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவுகளால் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகப் போக்குவரத்துக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

மார்ச் 13ஆம் தேதியிலிருந்து கார் ஓட்டுநர்களுக்கான அடிப்படை, இறுதி கருத்தியல் தேர்வுகளுக்கான கட்டணங்கள் $6.50லிருந்து $7.20க்கு உயர்த்தப்படும். மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கான கருத்தியல் தேர்வுக்கும் அது பொருந்தும்.

2027ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அந்தக் கட்டணங்கள் $8க்கு அதிகரிக்கும்.

பயிற்சி ஓட்டுநருக்கான செயல்முறைத் தேர்வுக்கும் தேர்ச்சி ஓட்டுநருக்கான தேர்வுக்கும் $33க்குப் பதில் இனி $40 கட்டணம் செலுத்தவேண்டும். கார், மோட்டார்சைக்கிள் என இரண்டுக்கும் அது பொருந்தும்.

அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அந்தக் கட்டணம் $45ஆகவும் 2028ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அது $50ஆகவும் உயர்த்தப்படும்.

மார்ச் 13ஆம் தேதியும் அதற்குப் பிறகும் தேர்வுகளுக்குப் பதிவு செய்தோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை குறிப்பிட்டது.

கிளாஸ் 3சி (Class 3C) அல்லது கிளாஸ் 3சிஏ (Class 3CA) உரிமம் வைத்திருப்போர் கிளாஸ் 4 அல்லது கிளாஸ் 4பி உரிமத்துக்குப் பதிவுசெய்ய விரும்பினால் சாலை நிலவரத்துக்கேற்ப ஓட்டுநரின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

கிளாஸ் 3சி அல்லது கிளாஸ் 3சிஏ உரிமம் வைத்திருப்போர் அந்தச் சாலை மதிப்பீட்டில் தோல்வியடைந்தால் கிளாஸ் 4 அல்லது கிளாஸ் 4பி பாடங்களுக்கு அவர்களால் பதிவுசெய்ய முடியாது.

அவர்களின் கிளாஸ் 3சி அல்லது கிளாஸ் 3சிஏ உரிமங்களும் ரத்துசெய்யப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை குறிப்பிட்டது.

உரிமம் ரத்தானதிலிருந்து ஓராண்டுக்கு அவர்கள் வேறெந்த வகையான வாகன உரிமத்தையும் பெற முடியாது.

குறிப்புச் சொற்கள்
வாகனம்ஓட்டுநர் உரிமம்பயிற்சிகட்டணம்அதிகரிப்பு