சிங்கப்பூரில் குறுகிய தூரம் செல்லக்கூடிய முதல் ஓட்டுநரில்லாத் தானியக்க வாகனம் பொங்கோலில் அறிமுகம் காணவிருக்கிறது. அடுத்த வாரத்திலிருந்து செயல்படத் தொடங்கும் அந்தத் தானியக்க வாகனத்தை அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கலாம்.
பொதுப் போக்குவரத்து மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு அந்தத் தானியக்க வாகனங்கள் சேவை வழங்கும். ஐந்து பேர் அமரக்கூடிய வாகனமும் எட்டுப் பேர் அமரக்கூடிய வாகனமும் மூன்று பாதைகளில் பயணம் செய்யும். அவற்றின் மூலம் பயண நேரம் கால் மணி நேரம் மிச்சமாகும்.
முதல் தொகுப்பில் உள்ள மூன்று வாகனங்கள் புதிய பாதைகளை வரையறுத்து, அதில் எப்படிச் செல்வது என்பதை மூன்று மாதங்களில் பழக்கப்படுத்திக்கொள்ளும். அவற்றில் பயணிகள் யாரும் இருக்கமாட்டார்கள்.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் தானியக்க வாகனச் சேவையை இலவசமாகச் சோதிக்க சமூக உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள். பிறகு 2026இன் இறுதியில் கட்டணத்துடன் சேவை தொடங்கும். தானியக்க வாகனமாக இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்புக்காக நடத்துநர் ஒருவர் வாகனத்தில் எப்போதும் இருப்பார்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஓட்டுநரின்றித் தானாகச் செயல்படும் 10 வாகனங்களைப் பொங்கோல் வட்டாரத்தில் கொண்டுவரத் திட்டமுள்ளதாகத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100லிருந்து 150 தானியக்க வாகனங்களைச் சேவையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
“பொங்கோல் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை இன்று தொடங்குகிறோம். பாதுகாப்பான, அறிவுசார்ந்த அனைவருக்கும் மேலும் ஏற்புடைய, இன்னும் வசதியான பொதுப் போக்குவரத்தை வழங்குகிறோம்,” என்றார் திரு சியாவ்.
தானாகச் செயல்படும் வாகனங்கள் பொதுப் பேருந்துக் கட்டமைப்புக்கு நல்ல பக்கபலமாக இருக்கும் என்ற திரு சியாவ், கூடுதலான பாதைகளில் அவை செல்வதுடன் இரவு நேரங்களிலும் சேவை வழங்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் வேலை இழப்பு தொடர்பான அச்சத்தைத் திரு சியாவ் களைய முற்பட்டார்.
“நீண்டகாலத்துக்கு வாகனங்களை ஓட்ட நிச்சயமாக மனிதர்கள் தேவை,” என்ற அவர், தானியக்க வாகனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.