தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசாவில் பாதுகாப்பு அதிகாரியின்றி ஓடும் ஓட்டுநரில்லா பேருந்து

1 mins read
0ccde875-e5ed-4220-a982-a15e6f64be12
செந்தோசாவில் கடந்த ஜூன் மாததிலிருந்து சேவை வழங்கும் வீரைட் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா பேருந்து. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் முதன்முறையாகப் பாதுகாப்பு அதிகாரி யாரும் இல்லாமல் தானியக்க பேருந்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தானியக்க வாகன நிறுவனமான வீரைட் (WeRide) தானாக இயங்கும் பேருந்து சேவையை ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் இயக்க நிலப் போக்குவரத்து ஆணையம் அனுமதி தந்துள்ளது.

விரிவான சோதனை, பாதுகாப்பு மதிப்பீடுகளுக்குப் பின் அந்த அனுமதி வழங்கப்பட்டதாக சீனாவின் குவாங்சோவைத் தளமாகக் கொண்ட வீரைட் நிறுவனம் சொன்னது.

உள்பாதுகாப்பு அதிகாரி யாரும் இல்லாமல் தானியக்க வாகனம் ஒன்று செயல்பட தென்கிழக்காசியாவில் அனுமதி பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

எட்டு இருக்கைகள் கொண்ட ஓட்டுநரில்லா பேருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செந்தோசாவில் 12 நிமிட வட்டப் பாதையில் சேவை வழங்கிவருகிறது.

அந்தப் பேருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருப்பதையும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குச் சேவை வழங்கியிருப்பதையும் வீரைட் நிறுவனம் சுட்டியது.

இவ்வாண்டு ஜனவரியில் பேருந்திலிருந்து விசைமாற்றியும் மிதிவிசைகளும் அகற்றப்பட்டன. இருப்பினும் அவசர நேரங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க ஓரு பாதுகாப்பு அதிகாரி பேருந்தில் இருந்தார்.

குறிப்புச் சொற்கள்