சுற்றுச்சூழல் சேவை வழங்கும் சியே தியாம் மெயின்டெனென்ஸ் நிறுவனம், இந்த ஆண்டிறுதிக்குள் (2024) மரினா கரையோரப் பகுதிச் சாலைகளில் ஓட்டுநரில்லா சாலைத் துப்புரவு வாகனங்களைச் சோதிக்கத் திட்டமிடுகிறது.
இத்தகைய இரண்டு வாகனங்களைச் சோதிக்க அது எண்ணம் கொண்டுள்ளது.
இந்த வாகனங்கள் ஒரு நாளின் 24 மணி நேரமும் செயல்படக்கூடியவை. பாதுகாப்பையும் வாகனத்தின் செயல்திறனையும் உறுதிசெய்ய, கட்டுப்பாட்டு அறை ஊழியர் அதைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்.
இருப்பினும் சோதனை ஓட்டத்தின்போது இந்த வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஓட்டுநரும் பணியில் ஈடுபடிருப்பார்.
ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒன்-நார்த் வட்டாரம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஜூரோங் புத்தாக்க மாவட்டம் ஆகியவற்றில் இதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இத்தகைய சோதனைகள் இடம்பெற்றன.
ஓட்டுநரில்லா சாலைத் துப்புரவு வாகனச் சோதனை தொடர்பில் நிலப் போக்குவரத்து ஆணையம், சியே தியாம் மெயின்டெனென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஜூன் 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் அவர் சியே தியாம் மெயின்டெனென்ஸ் நிறுவனத்துக்குச் சென்றிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், துப்புரவு நிறுவனங்கள் அவற்றின் மனிதவளப் பற்றாக்குறையையும் வர்த்தகத் தேவைகளையும் சமாளிக்க இந்தத் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்றார் அவர்.
360 டிகிரி கோணத்தில் சாலையைப் பார்வையிடும் வசதியும் 1 மீட்டர் தொலைவில் உள்ள பொருள்களைக் கண்டறியும் திறனும் கொண்ட இவ்வாகனம் மோதலைத் தவிர்ப்பதற்காக உடனடியாக நின்றுவிடும் என்று கூறப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஓர் ஊழியர் ஒரே நேரத்தில் எட்டு துப்புரவு வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை வடிவமைப்பது சியே தியாம் மெயின்டெனென்ஸ் நிறுவனத்தின் நீண்டகால இலக்கு.
துப்புரவுத் துறை உருமாற்றத் திட்டத்தின் ஓர் அங்கமாக, சாலைத் துப்புரவில் தானியங்கி வாகனத் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த தேசியச் சுற்றுப்புற வாரியமும் எண்ணம் கொண்டுள்ளது.

