பொங்கோலில் தொடங்கிய ஓட்டுநரில்லா வாகனச் சேவைகள்

பொங்கோலில் தொடங்கிய ஓட்டுநரில்லா வாகனச் சேவைகள்

2 mins read
c37a867b-c40d-47d7-9eff-41b500405619
பொங்கோலில் அறிமுகம் கண்ட புதிய ஓட்டுநரில்லா வாகனச் சேவையைப் பயன்படுத்தி பார்த்தார் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ‌ஷுவெலிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

பொங்கோல் வட்டாரத்தில் கம்ஃபர்ட்டெல்குரோவின் புதிய ஓட்டுநரில்லா வாகனங்கள், திங்கட்கிழமை (ஜூன் 22) அதிகாரபூர்வமாகச் சேவை வழங்கத் தொடங்கியுள்ளன.

தற்போதைக்கு அந்தச் சேவையைக் குடியிருப்பாளர்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பலதுறை மருந்தகம், பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதி, சேம் கீ இலகு ரயில் நிலையத்தில் உள்ள ஒன் பொங்கோல் ஆகியவற்றுக்கு ஓட்டுநரில்லா வாகனங்களில் பயணம் செய்ய முடியும்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து 50 நிமிடங்களுக்குப் பயணம் செய்யும் புதிய பாதை அறிமுகம் செய்யப்படும். அந்தப் பாதை, பல்துறை மருந்தகம் அமைந்திருக்கும் ஓயசிஸ் டெரசஸ் உள்ளிட்ட ஏழு நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.

zig.sg/driverless என்ற இணைப்புவழியாகவோ, கம்ஃபர்ட்டெல்குரோவின் சிக் செயலிவழியாகவோ ஓட்டுநரில்லா வாகனங்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் குறுகிய பாதைக்கான முன்பதிவுகளுக்கு மொத்தம் 230 இடங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் எப்படியும் 80 விழுக்காட்டு இடங்கள் முன்பதிவுசெய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக கம்ஃபர்ட்டெல்குரோ பேச்சாளர் தெரிவித்தார்.

காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை ஓட்டுநரில்லா வாகனங்களின் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொங்கோலில் சேவை வழங்கும் ஐந்து இருக்கைகள் கொண்ட ஓட்டுநரில்லா வாகனங்களை போனி.ஏஐ. சேஃப்டி ஆஃபிசர்ஸ் என்ற சீன நிறுவனம் தயாரித்தது.

பொங்கோல் குடியிருப்பாளர்களைத் தவிர்த்து வெவ்வேறு பேட்டைகளைச் சேர்ந்தோரும் புதிய ஓட்டுநரில்லா வாகனத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெற அங்குச் சென்றனர்.

பொங்கோலில் ஓட்டுநரில்லா பயணச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று கம்ஃபர்ட்டெல்குரோ. கிராப் நிறுவனம் இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு இலவசப் பயணச் சேவைகளை வழங்கிவருகிறது.

அது, மூன்று பாதைகளில் சேவை வழங்குகிறது.

பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம், பொங்கோல் கோஸ்ட் பேருந்து முனையம், கடைத்தொகுதிகள், பலதுறை மருந்தகம் ஆகியவற்றுக்குக் கிராப் வாகனங்கள் சேவை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்