வாகன உரிமம் பெற விரும்புவோர்க்குப் பயிற்சி அளிக்கும் நிலையமான ‘சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர்’ (SSDC), 2028ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஓட்டுநர் பயிற்சிப் பாதையை அறிமுகம் செய்யவிருக்கிறது.
நுண்ணறிவு மிக்க ஓட்டுநர் பயிற்சிப் பாதை (Intelligent Driving Circuit - IDC) என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பின்கீழ் பயிற்சி பெறுபவருக்கு, வாகனத்திற்குள் பயிற்றுவிப்பாளர் அருகே அமர்ந்திருக்கத் தேவையில்லை.
முன்னர் திட்டமிட்டதைவிட ஐந்து ஆண்டுகள் கழித்தே இந்த நவீன வசதியை அறிமுகம் செய்கிறது ‘எஸ்எஸ்டிசி’ நிலையம்.
‘ஐடிசி’ கட்டமைப்பு பயிற்சியாளரின் செயல்திறனைக் கண்காணித்து, ஆய்வு செய்யும். தேவை ஏற்பட்டால் அந்தக் கட்டமைப்போ தொலைவிலிருந்து கண்காணிக்கும் நபரோ வாகனத்தை நிறுத்த முடியும்.
இந்தப் புதிய வசதி, புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி நிலையத்துக்குப் பதிலாக 2030ஆம் ஆண்டு சுவா சூ காங்கில் அமையவிருக்கும் புதிய நிலையத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.
‘ஐடிசி’ கட்டமைப்பு, அதிவேக தரவுக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட கேமராக்களையும் உணர்கருவிகளையும் பயன்படுத்திப் பயிற்சியாளர்களைக் கண்காணிக்கும். வாகனத்தின் நிலை, ஓட்டுநரின் செயல்பாடு, வாகனத்தைச் சுற்றியுள்ள பகுதி ஆகியவற்றை அது ஆய்வு செய்யும்.
கார், மோட்டார்சைக்கிள், கனரக வாகனம் ஆகியவற்றை ஓட்டுவதற்கு ‘ஐடிசி’ கட்டமைப்பு மூலம் பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சிப் பாதைக்குள் பயிற்றுவிப்பாளரின் துணையின்றி ஓட்டுவதற்கு இந்தக் கட்டமைப்பு உதவினாலும் செய்முறைத் தேர்வின்போது சாலைகளில் தேர்வாளர் உடனிருக்கும் முறை தொடரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிங்கப்பூர்க் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஐடிசி’ கட்டமைப்பை ஜப்பானிய கார்த் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா உருவாக்கியுள்ளது. வாகனத்தை ஓட்டும் முறையில் சிறிதளவு மாற்றம் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்கும் திறன் அதற்கு உண்டு என்று ‘எஸ்எஸ்டிசி’ நிலையம் கூறியது.
பயிற்றுவிப்பாளரைச் சார்ந்திருக்கும் தேவை குறைவதால் நிலையம் தற்போது இயங்கும் நேரத்திற்கு அப்பாலும் பயிற்சியாளர்கள் பயிற்சி மேற்கொள்ள ‘ஐடிசி’ உதவும் என்று காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், 2017ஆம் ஆண்டு இந்த ‘ஐடிசி’ கட்டமைப்பு குறித்து அறிவித்தார். 2023க்குள் ‘எஸ்எஸ்டிசி’ நிலையத்தில் அது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளால், கட்டமைப்பைச் சோதிப்பதில் தாமதம் நேர்ந்ததாகக் காவல்துறை சொன்னது.

