கவனக்குறைவுடன் லாரி ஓட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியரின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக கூறப்பட்டு, வாகன ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டும் இந்திய நாட்டவரான 27 வயது நடராஜன் மோகன்ராஜ் தொடர்ந்து இருமுறை லாரி ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதியன்று நிகழ்ந்த விபத்தில் 70 வயது ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் டான் யோக் லின் மாண்டார்.
விபத்துக்குப் பிறகு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி, மே மாதங்களில் மோகன்ராஜ் இருமுறை லாரி ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 6ஆம் தேதியன்று மோகன்ராஜ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் மீது பத்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் டானுக்கு மரணம் விளைவித்ததும் அவற்றில் அடங்கும்.
வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி காலை 8 மணி அளவில் சிம்ஸ் அவென்யூவில் மோகன்ராஜ் லாரி ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் பாதுகாப்பு இடைவார் அணியவில்லை என்று அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, லாரி உரிமையாளரின் அனுமதியின்றி 2024ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மோகன்ராஜ் வாகனம் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் டிசம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி பேராசிரியர் டானுக்கு மரணம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோகன்ராஜுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

