காதலியின் காரை ஓட்டி விபத்து; 82 வயது ஆடவருக்குச் சிறை

1 mins read
67228be9-5fda-4283-aeff-2a5204d9e84d
வாகன நிறுத்துமிடத்தில் பிரேக்கை அழுத்துவதற்குப் பதில் முதியவர் வேக விசையை அழுத்தியுள்ளார். அதனால் கார் விபத்துக்குள்ளானது. - படம்: ‌ஷின்மின்

கார் ஓட்டுவதற்கு உரிமம் இல்லாத 82 வயது ஆடவர், தனது காதலியின் அனுமதி இல்லாமல் அவரது காரை ஓட்டியுள்ளார்.

கார் ஓட்டும்போது தடுமாறிய அந்த முதியவர் விபத்து ஒன்றையும் ஏற்படுத்தினார்.

புதன்கிழமை (அக்டோபர் 22) லோ சுன் மெங் என்னும் அந்த முதியவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த முதியவர் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முதியவர்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். நீதிமன்ற ஆவணங்களில் லோவின் வாகனம் ஓட்டும் உரிமம் 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியானது குறிப்பிடப்பட்டிருந்தது.

விபத்து 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. 57 வயதான தனது காதலியுடன் அந்த முதியவர் அங் மோ கியோவில் வசித்துவந்தார்.

மூட்டில் வலி இருந்த காரணத்தால் அந்த முதியவர் தனது காதலியிடம் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு டவுனர் ரோட்டில் உள்ள மருத்துவ நிலையத்திற்குச் சென்றார்.

மருத்துவரைப் பார்த்த பிறகு பீ‌‌‌ஷான் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 151 அருகே உணவு வாங்கக் காரை நிறுத்தியுள்ளார்.

வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்து விசையை அழுத்துவதற்குப் பதில் முதியவர் வேக விசையை அழுத்தியுள்ளார். அதனால் கார் விபத்துக்குள்ளானது.

குறிப்புச் சொற்கள்
கார்விபத்துசிறை