$78,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

$78,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

2 mins read
95e4151c-8ef5-426f-954d-2f241693729d
செப்டம்பர் 18ஆம் தேதி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 695 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செப்டம்பர் 18ஆம் தேதியன்று நடத்திய அதிரடிச் சோதனையில் ஏறத்தாழ $78,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது மதிக்கத்தக்கச் சிங்கப்பூரர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஒரு வாரத்துக்கு 390 போதைப் பித்தர்களுக்குத் தேவையான அளவு என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில் கூறினர்.

செப்டம்பர் 18ஆம் தேதி மாலை செங்காங்கில் ரிவர்வேல் வாக் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பில் 19 வயது ஆடவரையும் அதே வயதுடைய மாதையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்தக் குடியிருப்பின் படுக்கையறையில் இருந்த மின்னிலக்க முறையில் எடையை அளக்கும் இயந்திரம், பல்வேறு போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஹவ்காங் அவென்யூ 7க்கு அருகில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பேட்டையில் அந்த ஆடவர் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டிற்குச் சந்தேக நபர்கள் இருவரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 486 கிராம் ‘ஐஸ்’, 695 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிராங்கூன் நார்த் அவென்யூ 3ல் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அந்தக் குடியிருப்பின் படுக்கையறையில் இருந்து 24 கிராம் ‘ஐஸ்’, பல்வேறு போதைப் பொருள்கள், $11,400 ரொக்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்தக் குடியிருப்பில் வைத்து 19 வயது ஆடவர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்