தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் ஒழிப்பு: விரிவடையும் தலைமுடி சோதனை

2 mins read
e4ae1930-4079-4333-9a3a-dfe0a8b134f8
கல்வி அமைச்சும் மத்தியப் போதை ஒழிப்புப் பிரிவும் இணைந்து பெற்றோர் ஆதரவு குழுத் தலைவர்களுக்குப் போதைப்பொருள் தொடர்பான விவரங்களை வழங்கவுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப்பொருள் உட்கொண்டவர்களைக் கண்டுபிடிக்கத் தலைமுடி சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அந்தச் சோதனை விரிவாக்கம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் போதைப் புழங்கிகளை மேற்பார்வையிடுவதற்கும் அவர்களின் மறுவாழ்வு திட்டத்தைக் கண்காணிக்கவும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், மலாய்/முஸ்லிம் மற்றும் இந்தியச் சமூக அமைப்புகளுடன் இணைந்து முன்னாள் குற்றவாளிகளைச் சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்தச் சோதனைத் திட்டம் முக்கிய அங்கம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) உள்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டது. அப்போது அமைச்சின் துணையமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராகிம் தலைமுடி சோதனை விரிவாக்கம் குறித்துப் பேசினார்.

“சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் சில அக்கறைக்குள்ளான செயல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளையர்கள் போதைப் புழங்கிகளாக மாறும் போக்கு அதிகரித்துள்ளது,” என்றார் திரு இப்ராகிம்.

அதனால் உள்துறை அமைச்சு சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்க முடியும் மேலும் முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வும் வழங்கப்படும் என்றார் அமைச்சர் இப்ராகிம்.

கண்காணிப்பில் உள்ள போதைப் புழங்கிகள் 2026ஆம் ஆண்டுக்குள் தலைமுடி சோதனை செய்திருக்க வேண்டும். இது நீண்டநாள் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய உதவும்.

சிறுநீர் சோதனையில் நீண்டநாள்களுக்கு முன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் தலைமுடி சோதனையில் இது கண்டுபிடிக்கப்படும்.

சிறுநீர் சோதனை அடிக்கடி செய்ய வேண்டும், தலைமுடி சோதனை அடிக்கடி செய்யத் தேவையில்லை. இது மறுவாழ்வு நடவடிக்கையில் உள்ளவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காது.

இதுதொடர்பான முன்னோட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அது நல்ல முடிவுகளைத் தருவதாகவும் அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்நிலையில், கல்வி அமைச்சும் மத்தியப் போதை ஒழிப்புப் பிரிவும் இணைந்து பெற்றோர் ஆதரவு குழுத் தலைவர்களுக்குப் போதைப்பொருள் தொடர்பான விவரங்களை வழங்கவுள்ளதாக இப்ராகிம் தெரிவித்தார்.

இது பெற்றோருக்குப் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். எல்லாப் பள்ளிகளும் ஆண்டுக்கு ஒரு முறையாவது விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்