மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் பயணம் செய்தபோது போதைப்பொருள்களுடன் பிடிபட்ட 41 வயது சிங்கப்பூரர் கைதுசெய்யப்பட்டார்.
ஏப்ரல் 16ஆம் தேதி உட்லண்ட்ஸ் நிலச்சோதனைச் சாவடி வழியாக 4.7 கிலோ ஹராயின், 3.3 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைச் சிங்கப்பூருக்குள் அவர் கொண்டுவர முயன்றதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 19) தெரிவித்தன.
மலேசியப் பதிவெண் கொண்ட காரில் பயணித்த அந்த ஆடவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதை அதிகாரிகள் கவனித்ததையடுத்து, அந்தக் காரில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரைச் சோதனை செய்தபோது அவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் அடங்கிய 10 மாத்திரைகள் அடங்கிய அட்டை இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.
உடனடியாக, அவர் பயணித்த காரை கூடுதல் சோதனைக்கு உட்படுத்தினர். அதிலிருந்து போதைப்பொருள்கள் அடங்கிய பை ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவரிடமிருந்து கிட்டத்தட்ட 1,200 வெள்ளிக்கும் அதிகமான சிங்கப்பூர், மலேசிய, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏப்ரல் 17ஆம் தேதி, உட்லண்ட்ஸ் டிரைவில் அந்த ஆடவர் வசித்த குடியிருப்புக்கு அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.
அங்கிருந்து, 307 கிராம் கெட்டமைன், 175 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை அவர்கள் கைப்பற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு கிட்டத்தட்ட 845,500 வெள்ளிக்குமேல் இருக்கும் என்றும் அவை 3,730 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தப் போதிய அளவிலானது என்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
போதைப்பொருளைக் கடத்தியதாக நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

