பேஃபிரண்ட் அவென்யூ, மரினா வேயில் உள்ள மரினா ஒன் ரெசிடன்சஸ் என்ற தனியார் வீட்டில் ஏப்ரல் 16 அன்று போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் சாதனத்தை வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹார்டிங் சிட்டி ஹெரல்ட் ஐவன் என்ற 35 வயது ஆடவர், காளான்களில் இருந்து சேகரிக்கப்படும் சைலோசின் என்ற போதைத் திரவம் கலந்த சாக்லெட்களை வைத்திருந்த குற்றத்தையும் எதிர்நோக்குகிறார்.
மொத்தம் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்கள், அமெரிக்கரான ஐவன், ஏப்ரல் 16ம் தேதி, அல்லது அதற்கு முன்னரோ, கெனபிஸ் என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கின்றன. அவர் ஒன்பது மின்சிகரெட் புகைப்பதற்கான சாதனங்களைப் பெற முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவற்றில் ஆறு சாதனங்களில் கெனபிஸ் போதைப்பொருள் இருந்துள்ளது.
அவரது வழக்கு நீதிமன்றத்தில் அக்டோபர் 13 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. போதைப்பொருளை உட்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் $20,000 அபராதம் அவருக்கு விதிக்கப்படலாம்.
கெனபிஸ் போதைப்பொருள் பயன்படுத்தும் சாதனத்தை வைத்திருந்தால் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறையும் $20,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
மின்சிகரெட் தொடர்பான குற்றங்களைப் பற்றிப் புகாரளிக்க தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை 6684-2036 அல்லது 6684-2037 என்ற சுகாதார அறிவியல் ஆணைய அவசரத் தொலைபேசி எண்களை அழைக்கலாம். இணையத்தில் www.go.gov.sg.reportvape என்ற முகவரியில் புகார்களை பதிவிடலாம்.