போதைப்பொருளுடன் தொடர்புடைய சாலை விபத்துகள்; மருத்துவர் எச்சரிக்கை

போதைப்பொருளுடன் தொடர்புடைய சாலை விபத்துகள்; மருத்துவர் எச்சரிக்கை

2 mins read
b198733d-d431-4564-a5e8-202dc4bece59
கடந்த 16 மாதங்களில் ஏற்பட்ட ஒருசில சாலை விபத்துகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது. - படம்: ‌ஷின் மின்

சிங்கப்பூரில் இம்மாதம், 12 நாள்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் போதைப்பொருள் உட்கொண்டபின் வாகனம் ஓட்டியதாக மூவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், வாகன விபத்துகளுக்குப் பிறகே அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட குற்றம் கண்டறியப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட ஆடவரில் இருவர், வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது மெத்தம்ஃபெட்டமின் அல்லது ‘ஐஸ்’ என்று அழைக்கப்படும் போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. மூன்றாவது ஆடவர் எட்டோமிடேட் உட்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் எட்டோமிடேட் கேபோட்ஸ் என்று அறியப்படும் மின்சிகரெட்டுகளில் காணப்பட்டன.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவின் நச்சுயியல் மருத்துவர் ஜோனத்தன் டாங், எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் தொடர்புடைய சாலை விபத்துகளில் காயமடைந்த நோயாளிகள் சிலரைப் பார்ப்பதாகக் கூறினார்.

மதுபோதையைப் போல எட்டோமிடேட்டும் ஓட்டுநரை மந்தமாக்கக்கூடியவை என்று அவர் கூறினார்.

கடந்த 16 மாதங்களில் ஏற்பட்ட சில சாலை விபத்துகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டன.

2023ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட 38 சாலை விபத்துகள், போதைப்பொருள் அல்லது எட்டோமிடேட்டுடன் தொடர்புடையவை என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவற்றுள் 19 சாலை விபத்துகளில் மரணங்கள் ஏற்பட்டன. அதில், 10 விபத்துகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவை என்றும் ஒன்பது விபத்துகள் எட்டோமிடேட் தொடர்புடையவை என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி, பெண் பயணி ஒருவருடன் கார் ஓட்டிய ஆடவர் பேருந்தில் மோதினார். அந்த வாகனத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் 42 மின்சிகரெட்டுகளையும் 1,200க்கும் மேற்பட்ட ‘போட்’ கருவிகளையும் பறிமுதல் செய்தனர். அவற்றுள் சிலவற்றில் எட்டோமிடேட் இருந்தன.

விபத்தில் 28 வயதுப் பெண் உயிரிழந்தார். கார் ஓட்டுநரின் ரத்தத்திலும் பெண்ணின் ரத்தத்திலும் எட்டோமிடேட் காணப்பட்டது.

ஆக அண்மையில் காலாங் வட்டாரத்தில் ஆபத்தான வகையில் காரை ஓட்டியதாகக் கூறப்படும் 36 வயது முகம்மது ஃபிர்டாவுஸ் முகம்மது அக்ராம்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர், ஐஸ்’ (Ice) எனப்படும் போதைப்பொருளை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. போதைப்பொருளை உட்கொண்டபின் ஃபிர்டாவுஸ் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

தமது காரின் கட்டுப்பாட்டை இழந்த ஆடவர், டாக்சி ஒன்றின்மீது மோதியதில் அதிலிருந்த 60 வயது ஓட்டுநரும் 43 வயதுப் பயணியும் காயமடைந்தனர்.

இம்மாதம் 8ஆம் தேதி, பல போக்குவரத்துக் குற்றங்களுடன் மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருளை உட்கொண்ட நிலையில், காரைக் கொண்டு குப்பைத் தொட்டியின்மீது மோதிய 32 வயது சிவகந்தேஷ் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்சாலை விபத்துகுற்றச்சாட்டுமரணம்