மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை (ஜனவரி 4) நடத்திய சோதனையில் $1 மில்லியனுக்குமேல் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சிங்கப்பூரர்களான மூன்று ஆடவர்களும் ஒரு மாதும் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை பிற்பகல் கேலாங்கின் கேஷியா கிரசென்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் 27, 25 வயதுடைய இரு ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் கைதாவதைக் கண்ட மூன்றாவது சந்தேக நபரான 25 வயது ஆடவர், அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், அதிகாரிகள் துரத்திப் பிடித்ததில் அவரும் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் ஒன்று, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
அந்த 27 வயது ஆடவரிடம் ஏறக்குறைய 1,855 கிராம் ஹெராயின், 1,032 கிராம் ஐஸ், 98 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 300 எரிமின்-5 மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இரண்டாமவரான 25 வயது ஆடவரிடம் ஏறக்குறைய 136 கிராம் ஐஸ், 21 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த 27 வயது ஆடவர் ஒளிந்திருந்த இடம் எனச் சந்தேகிக்கப்படும் குடியிருப்பு ஒன்றில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பின்னர் சோதனை நடத்தினர். அங்கு 73 கிராம் ஐஸ், 21 கிராம் ஹெராயின், 20 எரிமின்-5 மாத்திரைகள், சிறிய அளவிலான எக்ஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்புழங்கி எனச் சந்தேகிக்கப்படும் 25 வயது மாது, அந்தக் குடியிருப்பில் கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள், ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ 4,590 போதைப்புழங்கிகள் உட்கொள்வதற்குப் போதுமானவை என மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (ஜனவரி 6) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
15 கிராமுக்குமேல் தூய ஹெராயின், 250 கிராமுக்குமேல் ஐஸ் அல்லது 500 கிராமுக்குமேல் கஞ்சா கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம்.
விசாரணை தொடர்வதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

