மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய அளவு போதைப்பொருள் கடத்தலில் இருந்து 0.01 கிராம் குறைவாக அந்த போதைப் பொருளை வைத்திருந்த 58 வயது குற்றவாளி மரண தண்டனையில் இருந்து தப்பித்தார்.
அதற்கு அவருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மெஸ்நாவி டாஹ்ரி என்பவரிடம் போதைப்பொருள் கடத்தலுக்காக 14.99 கிராம் டயமார்ஃபின் என்ற கலவையில்லாத ஹெராயின் இருந்ததால் பிடிபட்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர்மீது தொடக்கத்தில் 15 கிராம் டயமார்ஃபின் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
போதைப்பொருள் கடத்தலுக்கு என 15 கிராம் டயமார்ஃபின், 250 கிராம் மெத்தம்ஃபெட்டமின் அல்லது 500 கிராம் கென்னபிஸ் என்ற கஞ்சா போதைப்பொருள் ஒருவர் வைத்திருந்தால் அவருக்கு மரண தண்டனை கட்டாயம் என்று சட்டம் கூறுகிறது.
மெஸ்நாவிக்கு எதிரான குற்றச்சாட்டு திருத்தப்பட்டு அவரிடம் 14.99 கிராம் டயமார்ஃபின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மெஸ்நாவி நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றில் மூன்று போதைப்பொருள் தொடர்பானவை; மற்றொன்று கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றச்சாட்டு.
அவருக்கு எதிரான மேலும் இரண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவருடைய 31 ஆண்டு சிறைத்தண்டனையில் 10 வாரங்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றச்சாட்டுக்கானது.