போதைப்பொருள் கடத்தல்: 79 வயது ஆடவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

போதைப்பொருள் கடத்தல்: 79 வயது ஆடவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

கோப்புப் படம்: சாவ் பாவ்

08 Aug 2026 - 5:17 pm

1 mins read

கிட்டத்தட்ட 24.81 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 79 வயது குடியுரிமையற்ற டியோ இயூ கின் டீ என்பவருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2020 ஜனவரி 14ஆம் தேதி கேலாங் பாரு பகுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் டியோ கைது செய்யப்பட்டார். அப்போது 29 வயதில் இருந்த மலேசியரான யோகேஸ்வரன் மனோகரனிடமிருந்து டியோ நீல நிறப் பையைப் பெற்றுக்கொண்டபோது அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தனர்.

அப்பையில் இருந்த இரு பொட்டலங்களில் 24.81 கிராமுக்குக் குறையாத ஹெராயின் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மலேசியரான யோகேஸ்வரன் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்ற விசாரணையின்போது, சொந்தப் பயன்பாட்டிற்காகவே போதைப்பொருளைப் பெருமளவில் வாங்கியதாக டியோ வாதிட்டார். எனினும், அவரது வேலையில்லாத நிலை, வீட்டில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்தது.

கடந்த 2023 ஜூன் 19ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குச் சட்டப்படி அனைத்து மேல்முறையீட்டு வாய்ப்புகளும் வழங்கப்பட்டு, அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்போதைப்பொருள்கடத்தல்ஒழிப்புதூக்குத் தண்டனைபோதைப் பொருள்முதியவர்