தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சிங்கப்பூர் ஒருவர், கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
50 வயதான டான் லெங் சோங், மற்றொரு நபருடன் சேர்ந்து காய்கறிப் பொருள்களைக் கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்தப் பொட்டலங்களில் குறைந்தது 4,990.6 கிராம் கஞ்சா கலவை இருப்பது கண்டறியப்பட்டது.
500 கிராமுக்குமேல் கஞ்சா அல்லது 1 கிலோவுக்குமேல் கஞ்சா கலவையைக் கடத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) 2024 ஜூலையில் நடத்திய ஒரு போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின்போது டானின் குற்றச்செயல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், கைதுசெய்யப்பட்ட நேரத்தில் 64 வயதுடைய ஒரு சிங்கப்பூரராவார். ஏறக்குறைய 4,990 கிராம் கஞ்சா கலவை சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டுள்ளார்.
பணமோசடிக் குற்றங்கள் குறித்த விசாரணையின்போது அந்த 64 வயது ஆடவரிடமிருந்து $1,000க்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
2023 ஜூலை 27 முதல், டான் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்ததாக சிஎன்பி புதன்கிழமை (ஜூலை 9) தெரிவித்தது.
டானின் குற்றங்களுக்கு சிங்கப்பூரில் உடந்தையாக இருந்தவர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகிப்பதில் அவருக்கு இருந்த சந்தேகத்திற்கிடமான தொடர்புக்காக அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டது. டானுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பின்னர் இங்கு போதைப்பொருள்களைக் கடத்தி விற்பனை செய்வார்கள்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தால் ஜூலை 5ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட டான், புதன்கிழமை சிஎன்பியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பணமோசடிக் குற்றங்களுக்காகவும் டான் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
டானுடன் தொடர்புடைய, $242,000க்கும் அதிகமான நிதி கொண்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்ததாகக் கண்டறியப்படும் பணம், அரசுக்கு பறிமுதல் செய்யப்படும் என்று சிஎன்பி தெரிவித்துள்ளது.