ஜோகூர் பாருவில் போதைப் பொருள் கடத்தல்; சிங்கப்பூரர் கைது

2 mins read
5b5e87b0-076b-490a-bcf2-36f049f8e3f4
ஹெராயின், கெட்டமின் போன்ற ஏழு வகையான போதைப் பொருள்கள் சந்தேகப் பேர்வழியின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. - படம்: பிக்சபே

போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டு ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சைனா பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த 33 வயது நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மலேசியாவில் செயல்படும் அந்த ஊடகம் கூறியுள்ளது. அந்த நபர் மீது ஜனவரி 31ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நபரையும் சேர்த்து மொத்தம் மூன்று சிங்கப்பூரர்கள், ஒரு தாய்லாந்து நாட்டுக்காரர் என நான்கு பேர் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வரும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று அந்த ஊடகத் தகவல் கூறுகிறது.

அந்த 33 வயது சந்தேக நபரைத் தவிர மற்ற மூவரும் புதன்கிழமை (பிப்ரவரி 5) வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்றும் ஊடகத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜோகூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த நான்கு சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும் அவர்கள் அனைவரும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்த காவல்துறை, அவர்கள் ஒரு கொண்டோமினிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று விளக்கியது. அவர்கள் போதைப் பொருள் மின்சிகரெட்டுகள் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இதை கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதைச் செய்து வருவதாக காவல்துறை தெளிவுபடுத்தியது.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கு ஹெராயின், கெட்டமின் போன்ற ஏழு வகையான போதைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

இந்த போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, அந்த 33 வயது நபர் மீது மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பாக தேடப்பட்டு வந்ததாக மலேசிய காவல்துறை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்