ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு ஆளில்லா வானூர்தி மூலம் போதைப்பொருளைக் கடத்திய ஆடவர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுடன் சேர்ந்து மெத்தம்ஃபெட்டமினைக் கடத்துவதற்குத் திட்டமிட்ட அவர், வானூர்தி மூலம் அதனை அனுப்பும்படி இன்னொருவருக்கு உத்தரவிட்டார்.
2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றின்போது கிராஞ்சி நீர்த்தேக்கப் பூங்காவில் சம்பவம் நடந்தது. அதில் 34 வயது ஹெல்மி ஷாரெஸா ஷாரோம் பங்கெடுத்தார் என்று செப்டம்பர் 4ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.
சிங்கப்பூரரான அவர், முஹமது ஷாரெஸா முஹம்மது ஸூரியிடம் ஜோகூரின் பாந்த்தாய் லிடோவுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு ஆளில்லா வானூர்தியை அனுப்புமாறு உத்தரவிட்டதை மறுக்கவில்லை. பின்னர் அதில் ஒரு பையில் வைத்து மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் அனுப்பப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பூங்காவுக்கு மேலே உள்ள வான்வெளியில் சிங்கப்பூர்க் காவற்படையினர் வானூர்தியைக் கண்டனர். ஹெல்மியும் முஹமது ஷாரெஸாவும் சம்பவ இடத்தில் அன்றே பிடிபட்டனர்.
எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றனவா என்பதைக் கண்காணித்த மூன்றாமவரான முஹமது ஹஸ்ரி அப் ரஹிம் அதற்கு அடுத்த நாள் கைதானார்.
முஹம்மது நஸ்ரி ஜுமாட் என்று அடையாளம் காணப்பட்ட நான்காம் ஆடவர் மலேசியாவிலிருந்து செயல்பட்டார். அவர் போதைப்பொருளைக் கறுப்புப் பையில் வைத்து வானூர்தியுடன் பொருத்தினார். பின்னர் ஹெல்மியின் உத்தரவுப்படி முஹமது ஷாரெஸா சிங்கப்பூருக்கு வானூர்தியை அனுப்பினார்.
கிராஞ்சி நீர்த்தேக்கப் பூங்காவில் வானூர்தி இறங்கிக்கொண்டிருந்தபோது காவல்துறையினர் அருகில் இருப்பதாக ஹெல்மியிடம் ஹஸ்ரி சொன்னார். காவல்துறையினர் அங்குச் செல்வதற்குள் ஹெல்மி வானூர்தியிலிருந்து பையைப் பிரித்து அருகிலிருந்த புதருக்குள் வீசியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் காவல்துறையினரிடம் அகப்பட்ட அந்தப் பையில் 180 கிராமுக்கும் அதிகமான மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் இருந்தது.
‘ஐஸ்’ போதைப்பொருளைக் கொண்டுவருமாறு தாம் கூறியிருந்ததாக ஹெல்மி சொன்னார். அதனை வழக்கம்போல் படகின் மூலம் கொண்டுவருவதே திட்டம் என்றார் அவர்.
2020ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வானூர்தியில் போதைப்பொருள் கொண்டுவருவது பற்றித் தமக்குத் தெரியாது என்று ஹெல்மி சொன்னார்.
அவருக்கான தண்டனை பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும்.