போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் ஜனவரி 17, 18ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.
நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா உட்பட மற்ற வகை போதைப்பொருள்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 47 வயது சிங்கப்பூரர்.
அவர் ஜனவரி 17ஆம் தேதியன்று ஹாலந்து டிரைவ் அருகில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தது.
அந்த வீட்டில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்களைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர்.
4.113 கிலோ கஞ்சா, 135 கிராம் ‘ஐஸ்’, 31 கிராம் எக்ஸ்டசி, 40 எரிமின்-5 மாத்திரைகள், போதைப்பொருள் உட்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியவற்றுடன் $420,383.30 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜனவரி 18ஆம் தேதியன்று அதே வட்டாரத்தில் 29 வயது சிங்கப்பூர் ஆடவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சுவா சூ காங்கில் உள்ள அவரது வீட்டிலிருந்து போதைப்பொருளும் $180.20 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு $123,000க்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது.
500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

