தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிகரெட் புகைக்க கையூட்டு கொடுத்த போதைப் புழங்கிக்குச் சிறைத் தண்டனை

2 mins read
f6a67760-7f0e-4573-b00f-8a28564ad9ca
காவல்துறையின் கேன்டான்மன்ட் வளாகத்திற்குச் செல்லும் வழியில் சிகரெட் பிடிக்க கையூட்டு கொடுக்க முயன்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயது ராதிகா ராஜவர்மாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப் புழக்கத்திற்காக பலமுறை சிறை சென்றுள்ள பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டிலிருந்து போதைப் புழக்கத்திற்காகப் பலமுறை சிறைக்குச் சென்றுவந்த 42 வயது ராதிகா ராஜவர்மா, 2022ஆம் ஆண்டு சிகரெட் புகைப்பதற்காகக் காவல்துறை அதிகாரியிடம் $1,000 கையூட்டு கொடுக்க முயன்றதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

2020ஆம் ஆண்டு மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருளை உட்கொண்ட குற்றத்தை எதிர்கொண்ட ராதிகாவிற்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு 2022 ஜூனில் விடுதலையானார்.

அதையடுத்து கண்காணிப்பு உத்தரவின்கீழ் இருந்த ராதிகா, 2022 ஜூன் 18ஆம் தேதியிலிருந்து 2023 செப்டம்பர் 24ஆம் தேதி வரை எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருக்கவேண்டும்.

2022 ஜூன் 18ஆம் தேதியிலிருந்து 2027 ஜூன் 17 வரை போதைப்பொருள் கண்காணிப்புத் திட்டத்திலும் ராதிகா வைக்கப்பட்டார்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்துக்கும் இடையே சரியான காரணம் இல்லாமல் கட்டாய சிறுநீர்ப் பரிசோதனைக்கு 2022 ஆகஸ்ட் மாதம் ராதிகா வரவில்லை. அதையடுத்து அக்டோபர் 4ஆம் தேதி ராதிகா கைதுசெய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 28, ராதிகாவிற்கு ஐந்தாண்டு, எட்டு மாதம், நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் உட்கொண்டது, அதிகாரிக்குக் கையூட்டு கொடுக்க முயன்றது ஆகிய பல குற்றங்களை ராதிகா ஒப்புக்கொண்டார்.

கண்காணிப்பு உத்தரவை மீறியதற்காகவும் சிங்கப்பூரரான ராதிகா 265 நாள்களைச் சிறையில் கழிக்கவேண்டும்.

2022 அக்டோபர் 4ஆம் தேதி கைதுசெய்யப்படும் முன் ஓரிரு சிகரெட்டுகளைப் புகைக்க ராதிகாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், காவல்துறை கேன்டான்மண்ட் வளாகத்திற்கு வரும் வழியில் மீண்டும் ஒருமுறை சிகரெட் பிடிக்கவேண்டும் என்று ராதிகா கேட்டுக்கொண்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு சொன்னதை அடுத்து ராதிகா அவர்களுக்கு $1,000 கையூட்டு வழங்க முயற்சி செய்தார்.

ஒருநாள் கழித்துப் பிணையில் விடுவிக்கப்பட்ட ராதிகா போதைப்பொருள் புழக்கத்திற்காக மீண்டும் 2023, ஜூலை 29ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்