சிங்கப்பூருக்கு 2.3 கிலோ ஹெராயினையும் 12 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் கடத்திக் கொண்டுவரும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு வந்த சிங்கப்பூர்ப் பதிவெண் கொண்ட ஒரு காரை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சோதனையிட்டனர்.
அப்போது போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஐந்து பொட்டலங்களும் போதைப்பொருள் சார்ந்த துணைப்பொருள்களும் அந்தக் காரின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காகச் சந்தேகத்தின்பேரில் 32 வயது ஆடவரையும் 36 வயதுப் பெண்ணையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளையும் அப்பெண் தமது ஆடையில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $250,000 என்றும் அவை 1,120 போதைப்புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் 15 கிராமிற்குமேல் ஹெராயினைக் கொண்டுவந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

