ஜோகூர் பாரு: ஜோகூர் காவல்துறையினர் சிங்கப்பூரர் ஒருவர் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மலேசிய ரிங்கிட் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலேசிய காவல்துறையினர் ஜோகூர் பாருவில் உள்ள ஏழு இடங்களில் பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் அதிரடியாக சோதனை நடத்தியதாக மலேசியாவின் பெர்னாமா செய்தித்தளம் தெரிவித்தது.
கைதுசெய்யப்பட்ட அந்தக் குற்றக் கும்பல், கொண்டோமினிய வீடுகள், வாயிற்கதவுடன் கூடிய அடுக்குமாடி வீடுகளில் அந்தப் போதைப்பொருள்களை வைத்திருந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14ஆம் தேதி) விளக்கினார்.
அந்தக் கும்பல் கோலாம்பூரிலிருந்து அந்த போதைப்பொருள்களைத் தருவித்ததாக நம்பப்படுகிறது. பல வகையான போதைப்பொருள்களை அவர்கள் நீருற்றி உடனடியாகக் கலந்து பானமாக அருந்தக்கூடியது என்று நம்பத் தூண்டும் வகையில் அவற்றை சிறு சிறு பொட்டலக் கலவைகளாக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவை பின்னர் ஒரு பொட்டலம் 200 ரிங்கிட்டிலிருந்து (S$60.40) 250 ரிங்கிட்வரை (S$75.50) விற்கப்பட்டதாக அறியப்படுகிறது.
பொடியாக்கி வைக்கப்பட்ட நிலையில் 15 கிலோகிராம் எக்ஸ்டசி, ஒரு கிலோகிராம் கெட்டமின், 7,800 எக்ஸ்டிசி மாத்திரைகள், 6,250 எரிமின்5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் அடங்கும்.
இவற்றுடன் காவல்துறையினர் நான்கு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள், 14 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், ரொக்கமாக மலேசிய ரிங்கிட் 1,491 (S$450) சிங்கப்பூர் வெள்ளி 117 ஆகியவற்றைக் கைப்பற்றினர் என்று கூறப்படுகிறது.
இதில் 41, 48 வயதுடைய இரு மலேசியர்கள், 47 வயது சிங்கப்பூரர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் பிப்ரவரி 17ஆம் தேதிவரை விசாரணைக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதில் 41 வயது ஆடவர் இதற்கு முன்னால் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அந்த மூவருக்கும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் மெத்தஃபெட்டமின் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.