துவாஸ் சோதனைச்சாவடியில் கார் ஒன்றில் 3.8 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தோராய மதிப்பு $272,000க்கும் அதிகம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்தன.
கைது செய்யப்பட்டவர் மலேசியர் என்று அதிகாரிகள் கூறினர்.
காரை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதன் பின்புறத்தில் இரண்டு கறுப்புப் பொட்டலங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
காரின் பல்வேறு பகுதிகளில் மேலும் ஆறு கறுப்புப் பொட்டலங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அவை போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 1.908 கிலோ போதைமிகு அபின், 1.655 கிலோ கஞ்சா, 268 கிராம் மெதேம்ஃபெடமின் ஆகியவை அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவு, ஏறத்தாழ 1,300 போதைப் பித்தர்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையானதாகும்.
15 கிராமுக்கும் அதிகமான போதைமிகு அபின், 250 கிராமுக்கும் அதிகமான மெதேம்ஃபெடமின், 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சா ஆகியவற்றைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.