உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் காரிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் காரிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

1 mins read
a2edb521-b602-455f-90e4-80be989cd7fd
மொத்தம் 5,127 கிராம் கஞ்சாவும், ‘ஐஸ்’ என்று அழைக்கப்படும் 2,072 கிராம் மெத்தம்ஃபெட்டமினும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இவற்றின் மதிப்பு $547,000க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை அடைந்த மலேசியக் கார் ஒன்றிலிருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, 2 கிலோ மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 14ஆம் தேதி மாலை, அந்தக் காரின் பின்பகுதியில் போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படும் இரண்டு பிளாஸ்டிக் பைகளை குடிநுழைவு, சோதனைச்சாலடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

காரில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டனர்.

அந்த இரண்டு பைகளிலிருந்து மொத்தம் 5,127 கிராம் கஞ்சாவும், ‘ஐஸ்’ என்று அழைக்கப்படும் 2,072 கிராம் மெத்தம்ஃபெட்டமினும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இவற்றின் மதிப்பு $547,000க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளைக் கடத்த முயன்றதற்காகக் காரை ஓட்டி வந்த 23 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில், தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 42 மற்றும் 36 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்