ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில், ‘கேபாட்’ எனும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்த வீட்டில் அந்நாட்டுப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சுங்கத்துறையினரும் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, மின்சிகரெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டிற்குள் அதிகாரிகள் நுழைந்தபோது அந்த சிங்கப்பூரர் ‘எட்டோமிடேட்’ எனப்படும் போதைப்பொருளைக் கலந்துகொண்டிருந்ததாக சுகார்னோ-ஹாட்டா அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறைத் தலைவரான மூத்த ஆணையர் விஷ்ணு வர்தனா தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,200 கிராம் எட்டோமிடேட் குறித்த விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளைக் கொண்டு ஏறத்தாழ 2,000 மின்சிகரெட்டுகளைத் தயாரிக்க முடியும்.
அதிரடிச் சோதனையின்போது ஆயிரக்கணக்கான போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை விநியோகத்துக்குத் தயாராக இருந்தவை.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு சொகுசு குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டை மற்றொரு சிங்கப்பூரர் வாடகைக்கு எடுத்து, கைது செய்யப்பட்ட நபரைத் தயாரிப்புப் பணிக்காக அமர்த்தியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டிலிருந்து பேரளவிலான மின்சிகரெட்டுகளும் அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து இந்தோனீசியக் காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

