சுவா சூ காங் வட்டாரத்தில் சிங்கப்பூர்ச் சுங்கத்துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய ஏறத்தாழ 3,500 பெட்டிகள், 17 கிராம் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 25 முதல் 42 வயதுக்குட்பட்ட பங்ளாதேஷிய ஆண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று சுவா சூ காங் அவென்யூ 1ல் உள்ள ஒரு பொதுப் பயனீட்டு அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 'நாய் உணவு' என முத்திரையிடப்பட்ட பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,700 பெட்டிகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
மேலும், அங்கிருந்த ஐவர் கைது செய்யப்பட்டதோடு, கிட்டத்தட்ட 17 கிராம் எடையுள்ள ‘ஐஸ்’, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் அவை தொடர்பான உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 800 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தல் நடவடிக்கையின் மூலம் மொத்தம் $453,965 மதிப்பிலான தீர்வை மற்றும் பொருள், சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் விசாரணை தொடர்கிறது. போதைப்பொருள் தொடர்பான விவகாரங்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வரி ஏய்ப்புச் சிகரெட்டுகளைக் கையாள்வது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இக்குற்றத்துக்காக வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைவிட அதிகபட்சம் 40 மடங்கு அபராதத்துடன் கூடிய 6 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

