அக்டோபர் 16ஆம் தேதி மாலை சைனாடவுனில் நடந்த ஒரு விபத்திற்குப் பிறகு, போதைப் பொருள்களை உட்கொண்டு வாகனம் ஓட்டியதற்காக 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அன்று மாலை சுமார் 6.20 மணியளவில் நியூ பிரிட்ஜ் சாலையில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
26 வயதான அந்த நபரிடம் இருந்து ஒரு மின்சிகரெட் மற்றும் இரண்டு திரவக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர், மேலும் மின்சிகரெட் தொடர்பான இக்குற்றம் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இணையத்தில் பதிவேற்றப்பட்ட விபத்தின் படங்கள் மற்றும் காணொளிகளில், ஆறு வழிச் சாலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வலப்புறத் தடங்களுக்கு இடையில் ஒரு கறுப்பு நிற கார் அதன் பின்பகுதி திறந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
காரைச் சுற்றி ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இருப்பதைக் காணலாம். அதைச் சுற்றி குறைந்தது ஐந்து காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு நபர் தனது கைகளில் விலங்கிட்டு, காவல்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவதையும் காணமுடிகிறது.
விசாரணை தொடர்கிறது.