கே பிரதீப் ராம் எனும் 41 வயது ஆடவர், 2020இல் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி தமது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, வேனை ஓட்டினார்.
நண்பர்களில் ஒருவரை அவர் சாலையில் இழுத்துச் சென்றார். அவரது ரத்தத்தில் அளவுக்கு அதிகமான மது இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நாளில் அவர் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாகவும் மற்றோர் அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை பிரதீப்புக்கு 21 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
கார் நிறுத்துமிடத்தில் மதுபோதையில் இருந்த பிரதீப்புக்கும் அவரது நண்பர் பிரவீனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, கார்நிறுத்துமிடத்தில் பிரவீன் படுத்துக்கொண்டார். அவ்விடத்திற்கு அருகே பிரதீப் லாரியை ஆபத்தான முறையில் ஓட்டினார்.
பிரவீனின் உடைகள் லாரியின் கீழ்ப்பகுதியில் சிக்கின. அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தனர்.