தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபோதையில் ரயில் நிலைய அதிகாரியைத் தாக்கியவருக்குச் சிறை

1 mins read
fff3ec20-00ff-4cfe-bc35-6af077bfd349
மீனாட்சிசுந்தரம் பாண்டிசெல்வத்திற்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையும் $800 அபராதமும் விதிக்கப்பட்டது.   - படம்: பிக்சாபே

பணிமனைக்குச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றிலிருந்து வெளியேற மறுத்தார் 24 வயது ஆடவர் ஒருவர்.

ரயில் நிலைய உதவி மேலாளருடன் சண்டையிட்டு, அவரின் தலையை ரயில் கதவின்மீது மீண்டும் மீண்டும் இடித்தார் மீனாட்சிசுந்தரம் பாண்டிசெல்வம் என்ற அந்த ஆடவர். அதன் காரணமாக அந்த மேலாளர் மயக்கமடைய நேரிட்டது.

இதனையடுத்து, பிறரைக் காயப்படுத்தியதற்காக பாண்டிசெல்வத்திற்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையும், போதையில் முறையின்றி நடந்துகொண்டதற்காக $800 அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி நள்ளிரவு 12.15 மணிவாக்கில் அவர் பொங்கோல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டி ஒன்றில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது 55 வயது உதவி மேலாளர், பணிமனைக்குச் செல்வதற்குமுன் அந்த ரயிலில் யாரும் இல்லாததை உறுதிசெய்யச் சென்றிருந்தார்.

அப்போது, ரயிலில் பாண்டிசெல்வம் மதுபோதையில் இருந்ததை அவர் கண்டார். ரயிலைவிட்டு வெளியேறுமாறு அவர் பாண்டிசெல்வத்தைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், பாண்டிசெல்வம் வெளியேற மறுத்துவிட்டார்.

பாண்டிசெல்வத்தை ரயிலிலிருந்து வெளியே இழுத்து, அவரது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும்படி மேலாளர் கூறினார்.

இருப்பினும், பாண்டிசெல்வம் அவர் சொன்னதைக் கேட்காமல் அவரைத் துரத்தத் தொடங்கினார். பின்னர் அவரின் தலையைப் பிடித்து, பலமுறை ரயில் கதவின்மீது இடித்தார்.

மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மேலாளருக்குத் தாடையிலும் முழங்கையிலும் காயங்கள் ஏற்பட்டன.

குறிப்புச் சொற்கள்