உலக அளவில் உள்ள பாரம்பரிய தற்காப்புக் கட்டமைப்பைப் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றியமைத்துவருவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில் தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (டிஎஸ்டிஏ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் புத்தாக்கத்துடன் செயல்பட்டு ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று திரு லீ அறிவுறுத்தினார்.
ஷங்ரி-லாவில் நடைபெற்ற டிஎஸ்டிஏ அமைப்பின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மூத்த அமைச்சர் லீ உரையாற்றினார்.
விரைவாகவும் புத்தாக்கத்துடனும் செயல்படுவதன் அவசியத்தை ராணுவங்கள் உணரத் தொடங்குவதால் அமெரிக்காவைச் சேர்ந்த அன்டுரில், பெலன்டிர், ஜெர்மனியைச் சேர்ந்த ஹெல்சிங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக நாடப்படுகின்றன.
“அவை மென்பொருள் அடிப்படையிலான தளங்களுக்கு முன்னுரிமை அளித்து அவசர தீர்வுகளை உடனுக்குடன் தருகின்றன. தொடக்கத்திலிருந்தே முழுமையாக ஒன்றை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கெனவே உருவாக்கப்பட்டவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுவனங்கள் அவற்றை மேம்படுத்திவருகின்றன,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
மிகவும் வெற்றிகரமான புத்தாக்கங்களில் சில தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து வராமல் குறைந்த விலையில், அதிகாரபூர்வமற்ற செயல்பாடுகள் மூலம் வருகின்றன என்றார் அவர்.
ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் தொடரும் போர் தொழில்நுட்பமும் போர் உத்திகளும் எவ்வளவு துரிதமாக மாறி வருகின்றன என்பதைக் காட்டுக்கின்றன என்று திரு லீ சுட்டினார்.
மேம்பாடுகளைத் துரிதமாக்கவும் மற்ற நாட்டைவிட இன்னும் விரைவாக உருமாறவும் ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமற்ற நிறுவனங்களையும் சிறிய வர்த்தக நிறுவனங்களையும் சார்ந்திருக்கின்றன.
அத்தகைய நிறுவனங்கள் பாரம்பரிய தற்காப்புத் தொழில்நுட்ப நிறுவனங்களைவிட இன்னும் மலிவான விலையில் ராணுவத் தீர்வுகளை உருவாக்கித் தருகின்றன.
அதன் விளைவாக, ரஷ்யா முதன்முறையாக உக்ரேனை 2022ஆம் ஆண்டு ஆக்கிரமித்தபோது நடைபெற்ற போரைப் போல இப்போது நடக்கவில்லை.
சிங்கப்பூரும் ஒருவேளை அது போன்ற சண்டையில் சிக்கிக்கொண்டால் அதே நிலையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்ற திரு லீ, “இதுதான் தற்காப்புப் புத்தாக்கத்தின் புதிய நிலை,” என்றார்.