பிடோக் ஜெட்டிக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ‘டுகோங்’(dugong) எனப்படும் கடற்பசு ஒன்றின் சடலம், சனிக்கிழமை (ஜூன் 7) கண்டுபிடிக்கப்பட்டது.
2021க்குப் பிறகு உள்ளூரில் இந்தக் கடல் பாலூட்டி பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவரான 19 வயது ஜெரமி மார்க் ஆங், தமது நண்பர்களுடன் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலை 4.50 மணியளவில் பெரிய விலங்கு ஒன்றின் உருவம் தண்ணீரில் மிதப்பதைக் கண்டனர்.
ஆரம்பத்தில் அதனை ஒரு பெரிய மீன் என்று தவறாக நினைத்த அந்தக் குழுவினர், பின்னர் அது கடற்பசு ஒன்றின் சடலம் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்.
அருகிவரும் ஒரு கடல் பாலூட்டி விலங்கு இனத்தைச் சேர்ந்த கடற்பசு, கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளம் இருக்கலாம் என்று ஆங் கூறினார்.
கடற்பசுக்கள் (sea cows) என அழைக்கப்படும் இவை, பொதுவாகக் கடற்புல்வெளிகளில் மேயும் அரிதான உயிரினங்களாகும்.
நீண்ட ஆயுட்காலம் கொண்டுள்ள இவை மெதுவாக இனப்பெருக்கம் செய்வதாலும் மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு இவை எளிதில் பாதிக்கப்படுவதாலும் இது அருகிவரும் விலங்கினமாகக் கருதப்படுகிறது.
“ இங்கு இதனைப் பார்த்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சிங்கப்பூரிலும் சரி, பொதுவாகவும் சரி, அவை மிகவும் அரிதானவை என்பது எனக்குத் தெரியும் என்பதால் இது மிகவும் வருத்தமாக இருந்தது,” என்று ஆங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அந்தக் கடற்பசுவின் வயிற்றையும் வாலையும் சுற்றி பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்த நிலையில் கண்டபோது மனம் வெம்பியதாக அவர் கூறினார்.
பிள்ளைகள் சிலர், மீன்பிடி கொக்கிகளைப் பயன்படுத்தி கடற்பசுவின் சடலத்தை அருகில் இழுக்க முயன்றபோதும் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அந்தக் கடற்பசுவின் சடலம் மிதந்து கரை ஒதுங்கியது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பாலூட்டிப்பிரிவின் பொறுப்பாளர் மார்கஸ் சுவா, அதைக் கடற்பசு குட்டி என அடையாளம் கண்டார்.
இதற்கு முன்பு, 2021 இல் புலாவ் ஹந்துவுக்கு (Pulau Hantu) அருகே மற்றொரு கடற்பசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
“சிங்கப்பூரில் கடற்பசுக்களைப் பார்ப்பதோ அல்லது அவை கரை ஒதுங்குவதோ அரிது. எங்கள் கடற்கரைகளில் உயிருடன் பார்க்க வேண்டிய இவற்றைச் சடலங்களாகக் காண்பதில் மிகவும் வருந்துகிறோம்,” என்று திரு சுவா கூறினார்.
சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் அல்லது இறந்து கிடக்கும் கடற்பசுக்கள் பொதுவாக கப்பல்களில் முட்டி மோதுவதாகவும் மீன்பிடி வலைகளில் சிக்குவதாகவும் என்யுஎஸ்ஸின் கடற்பசு ஆராய்ச்சியாளர் சிரியஸ் எங் கூறினார்.
“தென்கிழக்காசியா மற்றும் அரேபிய வளைகுடா முழுவதிலும் உள்ள கடற்பசுக்களின் எண்ணிக்கையில் குட்டிகள் கரை ஒதுங்கும் விகிதங்கள் அதிகரித்துள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
சடலத்திலிருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின் உதவியை நாடியதாகத் திரு சுவா கூறினார்.

