பயணிகள் போல் நடித்து நிதி நெருக்கடியில் இருப்பதாக நம்ப வைத்து ஆடவர் ஒருவரிடமிருந்து ஏமாற்றி இருவர் செப்டம்பர் 3ஆம் தேதி $800 பறித்தனர்.
அந்த இருவரும் போலியான வங்கிச் சீட்டு, போலியான தங்க மோதிரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆடவர் ஏமாற்றினர். அவ்விருவரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5ஆம் தேதி) கைது செய்யப்பட்டனர். அவர்கள் சனிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று காவல்துறை கூறியது.
பணத்தை இழந்த அந்த ஆடவரை 31 வயதுடைய ஆடவர் ஒருவரும் 30 வயதுடைய மாது ஒருவரும் அப்பர் ஜூரோங் சாலை அருகில் ஜூ கூன் வட்டத்தில் உள்ள பேரங்காடியின் நுழைவாயிலில் சந்தித்ததாக காவல்துறை விளக்கியது.
அவ்விருவரும் தாங்கள் ஹாங்காங்கிலிருந்து வந்த பயணிகள் என்றும் தங்களிடமுள்ள வங்கி அட்டை செயல்படாமல் போயுள்ளதாகக் கூறி நிதி நெருக்கடியில் இருப்பதாக முறையிட்டனர்.
ஏமாந்த ஆடவரின் வங்கிக் கணக்கில் தான் பணம் போடுவதாகக் கூறி அதற்கென ஒரு போலி வங்கிச் சீட்டை ஆதாரமாகக் காண்பித்து அவசரமாக ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் எனக் காட்டி ஆடவரிடம் $800 கேட்டுப் பெற்றனர். அத்துடன், தங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக, மலேசிய ரிங்கிட் 11,980 பெறுமானமுள்ளதாகக் கூறி போலியான தங்க மோதிரம் ஒன்றையும் அவர்கள் ஆடவரிடம் கொடுத்தனர்.
பின்னர் தனது வங்கிக் கணக்கில் கூறப்பட்டதைப்போல் $800 போடப்படவில்லை என்று தெரிந்தவுடன் ஆடவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.