முதலாளியிடமிருந்து திருடிய டுரியான் கடை உதவியாளருக்குச் சிறை

முதலாளியிடமிருந்து திருடிய டுரியான் கடை உதவியாளருக்குச் சிறை

2 mins read
ebba834d-8f1f-4e85-969f-1ee4836366a2
‘டாப்டுரியான்ஸ்டேஷன்’ எனும் டுரியான் கடை, புளோக் 154, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11ல் அமைந்துள்ளது. - படம்: டாப்டுரியான்ஸ்டேஷன் / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது தனது மேற்பார்வையாளருக்காக டுரியான் கடை ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்த உதவியாளர் ஒருவருக்குக் கடையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தின் கடவுச்சொல் வழங்கப்பட்டது.

அதைப் பயன்படுத்தி அவர் அதிலிருந்து $17,300 திருடினார். பின்னர், மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக் கூடத்தில் சூதாடி அந்த முழுத் தொகையையும் இழந்தார்.

நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த 26 வயது மலேசியரான டான் ஆன் ஷெங்கிற்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ‘ஷின்மின் டெய்லி நியூஸ்’ தெரிவித்தது.

‘டாப்டுரியான்ஸ்டேஷன்’ எனும் அந்த டுரியான் கடை, புளோக் 154, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11ல் அமைந்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி 18ஆம் தேதிமுதல் 22ஆம் தேதிவரை சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில், அந்தக் கடையின் மேற்பார்வையாளர் விடுப்பில் சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்குமாறு டானிடம் கூறப்பட்டது.

அப்போதுதான் அவரிடம் பாதுகாப்புப் பெட்டகத்தின் கடவுச்சொல் முதன்முறையாக ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், ஒவ்வொரு நாளின் லாப, நஷ்ட கணக்குகளைச் சரிபார்த்து, அன்றைய நாளின் வருவாயைப் பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் வைப்பதற்கான பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 20, 22ஆம் தேதிகளில், டான் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து மொத்தம் $17,300 திருடினார்.

அதன் பிறகு, கடன் கொடுத்தவர்களிடம் தான் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான பணத்தை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், திருடிய பணத்தை எடுத்துக்கொண்டு அவர் மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக் கூடத்திற்குச் சென்றார்.

ஆனால், அவர் எல்லாப் பணத்தையும் அதில் இழந்தார். இறுதியில், டான் தமது குற்றங்களை முதலாளியிடம் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்