தாதிக்கு விருது: வேலை நேரத்திற்குப் பிறகும் தொடர்ந்த மனிதநேயம்

தாதிக்கு விருது: வேலை நேரத்திற்குப் பிறகும் தொடர்ந்த மனிதநேயம்

படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

26 Sep 2026 - 5:30 am

2 mins read

வேலை நேரம் முடிந்தது என்று சீருடையைக் கழற்றிவிடலாம். ஆனால், மனிதநேயத்தை மனத்தைவிட்டுக் கழற்றிவைக்க முடியுமா? முடியாது என்று கூறுகிறார் கூ டெக் புவாட் மருத்துவமனையின் தாதி மஹாலக்ஷ்மி நாகலிங்கம் குமாரசாமி, 37. 

தாதிமைப் பணியில் 14 ஆண்டு அனுபவம் பெற்றவர். இவருக்கு மருத்துவமனைக்குள் மட்டுமன்று, அதன் வெளியிலும் ஓர் உயிரைக் காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்தது.

இவ்வாண்டு ஜனவரி 21ஆம் தேதி மாலை மணி 4.30. பணி முடிந்த களைப்பில் உட்லண்ட்ஸ் சவுத் ரயில் நிலையத்தின் மின்படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார் திருவாட்டி மஹா.

அப்போது திடீரென உதவி கேட்டு ஓர் அலறல். மின்படிக்கட்டில் முதியவர் ஒருவர் மயங்கிச் சரிந்து விழுந்தார். பலரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, மஹா ஒரு நொடிகூட தாமதிக்காமல் களைப்பை மறந்து ஓடினார். அங்கிருந்த பள்ளி மாணவர் ஒருவரின் உதவியுடன் முதியவரைப் படிக்கட்டின் ஓரத்திற்குப் பாதுகாப்பாக நகர்த்தினார். 

அவரது நாடியைப் பிடித்துப் பார்த்தார். துடிப்பு மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டிருந்தது. இதயம் நின்றுபோகும் நிலை என்பதைப் புரிந்து கொண்ட திருவாட்டி மஹா, உடனடியாக இதய இயக்க மீட்புச் சிகிச்சையைத் (சிபிஆர்) தொடங்கினார்.

மனிதம் வென்ற தருணம்

சில மணித்துளிகளில் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் இதயத் துடிப்பைச் சீராக்கும் ‘ஏஇடி’ கருவியுடன் விரைந்து வந்தனர். ஓய்வு நேரத்தில் அவ்வழியே வந்த மருத்துவர்களும் தாதியரும் இணைந்துகொண்டனர். அனைவரும் அவசர மருத்துவ வாகனம் வரும்வரை விடாமல் முதலுதவி அளித்து முதியவரின் உயிரைக் காக்க முழுழூச்சாகச் செயல்பட்டனர்.

அந்தப் பதற்றமான தருணம் பற்றிப் பேசிய திருவாட்டி மஹாலக்ஷ்மி, “ஒவ்வோர் உயிரும் மதிப்புமிக்கது. அடுத்தவருக்கு மறுவாழ்வு கொடுக்க வாய்ப்புக் கிடைக்கும்போது நாம் தயங்கக்கூடாது,’’ என்றார்.

மேலும் 14 ஆண்டுகாலத் தாதிமை அனுபவமே அந்த நெருக்கடியிலும் பதற்றமடையாமல் சரியாகச் செயல்பட வைத்தது என்றும் அவர் கூறினார். அவரது செயலையும் மனிதநேயத்தையும் பாராட்டிச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ‘விரைந்து உதவும் மாண்பாளர்’ (Community First Responder) சமூக விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கூ டெக் புவாட் மருத்துவமனை, ஃபேஸ்புக் பக்கத்தில், “உங்கள் துணிவும் இரக்கமும் பிறரைக் கவனித்துக்கொள்வதன் உண்மையான பொருளை எடுத்துக்காட்டுகிறது,” என்று பதிவிட்டுள்ளது.

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருவாட்டி மஹா, அத்துடன் நின்றுவிடாமல் ஒரு முக்கிய அழைப்பையும் விடுக்கிறார். 

“இந்த விருது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஆனால், இதுபோன்ற தருணத்தில் யார் வேண்டுமானாலும் உதவ முடியும். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வழங்கும் இலவச ’சிபிஆர்’, ‘ஏஇடி’ பயிற்சிகளைப் பொதுமக்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அச்சமின்றி முன்வந்து உதவுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமது வாழ்க்கைப் பயணத்தில் துணைநிற்கும் குடும்பத்தினருக்கு, குறிப்பாகத் தம்மைப் பெரிதும் ஊக்குவிக்கும் கணவருக்கு நன்றிகூறிய அவர், “ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் வாழ்வில் சிறு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதில் எனக்கு மகிழ்ச்சியே,” என்று முகமலர்ச்சியுடன் கூறினார். 

குறிப்புச் சொற்கள்