வரி செலுத்தப்படாத மதுபானத்தை விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் எதிராக அக்டோபர் 8ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் சிங்கப்பூர் சுங்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரி செலுத்தப்படாத மதுபானத்தை விநியோகம் செய்த குற்றத்துக்காக சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களும் ஒரு மலேசியப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 42 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
வரி செலுத்தப்படாத மதுபானத்தைத் தமது வீட்டில் வைத்திருந்த குற்றத்துக்காக 45 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
வரி செலுத்தப்படாத 257 மதுப்புட்டிகள், ஒரு லாரி, மதுபானத்தைக் காய்ச்சப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் தோராய மதிப்பு (ஜிஎஸ்டி) $35,932.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் செலுத்தப்படாத வரியைவிட 20 மடங்கு அதிகம் அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இது தொடர்பான விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

