விரைவுச்சாலைகளில் செல்வதற்கு மின்சைக்கிள்களுக்கும் மிதிவண்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்து விதிகளை மீறி ஒருவர் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையின் சுரங்கப்பாதைப் பகுதியில் மின்சைக்கிளை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (மே 31) அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காரில் சென்ற பயணி ஒருவரால் பதிவு செய்யப்பட்டு, ‘எஸ்ஜி ரோடு விஜிலாண்டே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அந்த ஆடவர் தலைக்கவசம் அணியாமல் மின்சைக்கிளை ஓட்டிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது.
சுரங்கப்பாதையில் 50 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்புப் பெட்டிகளைக் கடக்க அவர் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில், அவர் மணிக்கு ஏறத்தாழ 35 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விதிமுறைப்படி, பதிவு செய்யப்பட்ட மின்சைக்கிள் ஒன்றின் அதிகபட்ச வேகம் 25 கிலோமீட்டர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கப்பாதையில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் உதவியுடன், விதிமீறிய அந்த ஆடவரை நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மேம்பட்ட விதிமுறைகளின்படி , ‘UL-2272’ என்ற தீப்பாதுகாப்புத் தரம் இல்லாத மின்ஸ்கூட்டர்களை வைத்திருப்பது சட்டவிரோதக் குற்றமாகக் கருதப்படும்.
முன்னதாக இவற்றை ஓட்டுவது மட்டுமே குற்றமாக இருந்த நிலையில், இனி இவற்றை வைத்திருப்போருக்கு $2,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

